Thursday, February 14, 2013

Mani Ratnam - Ilayaraja - Rahman - Factu!

Factu.

Mani Ratnam with Ilayaraja (in tamil): 8 films. 6 hits. 2 flops.
Mani Ratnam with Rahman: 11 films, 3 hits, 8 flops (incl kadal).

மணி ரத்னத்தின் தமிழ்ப் பற்று

கடல் படத்தில் ஆச்சரியமளித்த ஒரு விஷயம் - படத்தின் டைட்டில் கார்ட்.

Gemini Films circuit, Madras Talkies, A Mani Ratnam film போன்ற தயாரிப்பு விவரங்களைத் தவிர வேறு எதிலுமே ஆங்கிலம் இல்லை. படத்தின் டைட்டில், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் ஆகிய அனைத்தும் தமிழில் மட்டுமே இருந்தன. சமீபகாலமாக, முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் போன்றவை ஆங்கிலத்திலும் இருக்கும்படிதான் டைட்டில் கார்டை வடிவமைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஆங்கிலம் மட்டுமே கொண்ட ஒரு தமிழ்ப் படத்தின் டைட்டில் கார்டைக்கூட பார்த்திருக்கிறேன். படப்பெயர் ஞாபகம் இல்லை.

இங்கு அப்படியெல்லாம் தரம் பிரிக்கவில்லை. எங்கும் எதிலும் தமிழ். ரஹ்மான், மணிரத்னத்தின் பெயர்கள்கூட தமிழில் மட்டுமே இருந்தன. மணி ரத்னத்துக்குத் தமிழ்ப் பற்று இருந்தாலொழிய இது சாத்தியமில்லை.

ஃபேஸ்புக்கில் இதற்கான சில பதில்கள்:

Sudharsan Venkat: மணி ரத்னம் படத்தின் பாடல்களில் பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகள் கிடையாது.

Mahesh Subramanian: முழுக்க முழுக்க ஆங்கிலம் மட்டுமே கொண்ட ஒரு தமிழ்ப் படத்தின் டைட்டில் கார்டைக்கூட பார்த்திருக்கிறேன். படப்பெயர் ஞாபகம் இல்லை Anbe Aaryuiyre - SJ Surya Movie

Sunday, March 11, 2012

அடுத்தத் தலைவன்

(இந்த வார கல்கியில் நான் எழுதியுள்ள கட்டுரை இது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழுபோல வெளிப்படையான ஒரு தேர்வுக்குழு இருந்தால் மட்டுமே இவை எல்லாம் சாத்தியமாகும். பார்க்கலாம்.)



தோனியின் தலைமேல் கூர்மையான கத்தி. துணைத்தலைவர் பதவிக்கு ஷேவாக், கம்பீர், ரைனா போன்றோர் நியமிக்கப்பட்டபோது தோனிக்கு இவர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால், கோலியைத் துணைத்தலைவர் பதவிக்கு உயர்த்தியன் மூலமாக இந்திய கிரிக்கெட் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

ஒருவருடம் பின்னே சென்று பார்த்தால், நடந்ததெல்லாம் நம்பமுடியாதவையாகவே இருக்கின்றன. உலகக்கோப்பையை வென்ற அடுத்தச் சில வாரங்களில் ஐபிஎல் கோப்பையையும் இரண்டாவதுமுறையாகக் கைப்பற்றியபோது தோனியைப் பார்த்து கிரிக்கெட் உலகம் உண்மையிலேயே மிரண்டுதான்போனது. தோனி, தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுகூட தலையைக் காப்பாற்றிக்கொண்டுவந்ததால் (டெஸ்ட் தொடரில் 1-1), அழிக்கமுடியாத சக்தியாக விளங்கினார். அடுத்ததாக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தையும் சமாளித்துவிட்டால் தோனிக்கு நிகரான ஒரு கேப்டன் இனியில்லை என்கிற நிலை உருவானது. ஆனால், அந்த இடத்தில்தான் பெரிய திருப்பமும் சறுக்கல்களும் ஏற்பட்டன. பெரிய கனவோடு வந்த இந்திய அணியைக் குனியக் குனிய அடித்தது இங்கிலாந்து. டெஸ்ட், ஒருநாள் போட்டி இரண்டிலும் தோனியால் சிறு வெற்றியைக்கூட பெறமுடியவில்லை. முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள், தோனியின் போறாத நேரம் போன்றவற்றால் தோல்வி என்றுகூட சமாதானம் சொல்லப்பட்டது. இதற்கடுத்து, ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் மிகக் கவனமாக அணுகப்பட்டது. கூடுதலாக, ஒரு பயிற்சி ஆட்டம் நுழைக்கப்பட்டது. காயமடைந்த வீரர்களுக்குத் தேர்வுகள் எல்லாம் வைக்கப்பட்டன. ஆனால், மீண்டும் தோனியை சிறுஎறும்பாக எண்ணவைத்தது ஆஸ்திரேலியா. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் படுகேவலமாகத் தோல்வி கண்டது இந்தியா. தொடர்ந்து முக்கியமான 8 டெஸ்டுகளில் தோல்வி அடைந்தபோதும் தோனியால் இந்திய அணியில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவரமுடியவில்லை. எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒருநாள் தொடரில் தோனி சிறப்பாக ஆடியபோதும் படுகுழியிலிருந்த அணியை அவரால் மீட்டெடுக்கமுடியவில்லை. ஒரு கேப்டனாக தோனியின் உபயோகம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், கோலிக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி பல தீர்மானங்களை முன்வைக்கிறது.

கோலி, ஒரு பேட்ஸ்மேனாக, சச்சினின் சாதனைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடியவராக இருக்கிறார். தனக்கு முன்னால் ஆடவந்த ரைனா, ரோஹித் சர்மாவை கடந்துசென்றுவிட்டார். டிசம்பர் 2006ல், கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி மேட்சின் இரண்டாம் நாளின் முடிவில் கோலி அவுட் ஆகாமல் இருந்தார். கடினமான சூழ்நிலையில் அணியை மீட்டெடுக்கவேண்டிய சூழ்நிலை அப்போது. அடுத்தநாள் அதிகாலையில், கோலியின் தந்தை இறந்துபோன தகவல் கிடைத்தது. அணியின் வீரர்கள் கோலிக்கு ஆறுதல் சொல்லவந்தபோது, கோலி சொன்னார், 'நான் ஆடப்போகிறேன்'. அணிவீரர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருமகனாக அவர் செய்யவேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்கும். ஆனால், அணிக்காக மைதானத்தில் இறங்கி, 90 ரன்கள் அடித்து அணியை மீட்டெடுத்து, பிறகுதான் தந்தைக்கான இறுதிக்கடமைகளை முடிக்கச் சென்றார். இந்தத் தீவிரத்தன்மைதான் கோலியை இந்திய அணியின் அடுத்தத் தலைவனாக உயர்த்தியிருக்கிறது.

ஆசிய கோப்பைக்கு தோனிதான் கேப்டன். சச்சினும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஷேவாக்குக்கு ஓய்வு மட்டுமே, நீக்கமல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் ஒருவருக்குக்கூட பெரிய பாதிப்பில்லை (காரணம் - ஐபிஎல்). அடுத்ததாக, இலங்கைச் சுற்றுப்பயணம் இருக்கிறது. 2013வரை அமிலச்சோதனை எதுவும் கிடையாது. அந்தவருடம்தான் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறது. இந்த நிலையில் தோனியையும் கோலியையும் வாரியம் எப்படி கையாளப்போகிறது?

டெஸ்டில் இனியும் தோனிக்கு இடமில்லை என்று வாரியம் முடிவெடுக்கவேண்டும். பேட்டிங்கும் மோசம், கீப்பிங்கும் சுமார் என்பதால் டெஸ்ட் மேட்சுகளுக்கு தோனி தேவையா என்கிற கேள்வி எழுகிறது. தோனியை விடவும் சஹா கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். கீப்பிங்கும் நன்றாகவே செய்கிறார். இந்த நிலையில் தோனிக்காக ஓர் இளைஞனின் எதிர்காலத்தை வீணாக்கலாமா? தோனிக்குப் பதிலாக (குறுகிய காலத்துக்கு) ஷேவாக் அல்லது கம்பீர் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவேண்டும். அதுவரை, கோலியை தயார்படுத்தவேண்டும் (எப்படி கும்பிளே தலைமையில் தோனியைத் தயார் செய்தார்களோ, அதுபோல). ஒருவருடம் கழித்து, கோலி, டெஸ்ட் அணிக்குத் தலைமை தாங்கவேண்டும். (ஏற்கெனவே 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்குத் தலைமை தாங்கி உலகக்கோப்பையை வாங்கியிருக்கிறார் கோலி. மேலும், ஐபிஎல், ரஞ்சி அணிகளுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.) 2015 உலகக்கோப்பைக்கு இப்போதிருந்தே இந்திய அணி தயாராவதுபோல், 2013 தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்கும் ஒரு திட்டம் வேண்டும். ஆஸ்திரேலியத் தேர்வுக்குழுபோல வெளிப்படையாகவும் தொலைநோக்குப் பார்வையுடன் இருந்தால் மட்டுமே இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்ட முடியும்.

தாம், வீணாக்கப்படுகிறோம் என்று கோலி எண்ணுவதற்கு முன்பே முறையான பதவிகள் வழங்கப்படவேண்டும். கோலிதான் இந்திய அணியின் நம்பிக்கையான எதிர்காலம்.

நன்றி: கல்கி.

Wednesday, January 11, 2012

இந்த எழுத்து மட்டும் ஏன் இப்படி உயிரைக் குடிக்குறது?


எழுதுகிறமாதிரிக் கஷ்டம் வேறு ஒண்ணுமில்லை. எல்லோருக்கும் அவர் அவர் தொழில் செய்கிறபோது சந்தோஷம் வேண்டாமா? நாட்டியக்காரியைப் பாருங்க. எவ்வளவு ஆனந்தமாய் ஆடுகிறாள். பாடுகிறவன் கூட சந்தோஷமாய் பாடுகிறான். இந்த எழுத்து மட்டும் ஏன் இப்படி உயிரைக் குடிக்குறது? எனக்கு மட்டுந்தான் இப்படியா எல்லோருக்குமாண்ணு தெரியலையே!

- கி. ராஜநாராயணன் (தமிழ்நாட்டுக் கிராமியக் கதைகள் தொகுப்பில்).

Tuesday, January 10, 2012

காவல் கோட்டம் - கொலைவெறி ஹிட்!



2012 சென்னை புத்தகக் காட்சியின் ராக்ஸ்டார், சு. வெங்கடேசனின் காவல் கோட்டம்தான்.

சென்ற வருடம், சாகித்ய அகாடமி விருது வாங்கிய நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க, 2011 புத்தகக்காட்சியில் 3000 காப்பிகள் விற்றதாகச் சொல்லப்பட்டது. (ஆனால், தினத்தந்தி, தினமணியின் டாப் 5-யில் இதற்கு இடம் கிடைக்கவில்லை). இந்த வருட வசூல் மழை, காவல் கோட்டத்துக்கு.

சாகித்ய அகாடமி விருது, சென்னை புத்தகக்காட்சி போன்றவற்றுக்கு முன்பே காவல் கோட்டம், 3000 காப்பிகள் விற்றுத்தீர்ந்துவிட்டது. எனவே, விருது ஆரவாரத்துக்கு முன்பே புத்தகம் ஹிட்டுதான்.

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் ஒரே அமளிதுமளிதான். உடனேயே, மதுரையிலிருந்து 1500 ஆர்டர்கள் குவிந்திருக்கின்றன. புத்தகக்காட்சியில் கேட்கவே வேண்டாம். காவல் கோட்டத்தைக் கையிலேயே பிடிக்கமுடியவில்லை. நம்பமுடியாத அளவுக்கு, தினமும் 300 லிருந்து 400 காப்பிகள் வரை விற்றுக்கொண்டிருக்கிறது. புத்தகத்தின் விலை, ரூ. 650 என்பதை மறந்துவிடவேண்டாம். இதே ரீதியில் சென்றால், இந்த வருடம் 10,000 காப்பிகள் விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த வருட புத்தகக்காட்சியில், பலத்தப் போட்டி, பொன்னியின் செல்வனுக்கும் காவல் கோட்டத்துக்கும்தான்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/search.php?mode=search&page=1&keep_https=yes

2012 புத்தகக்காட்சி - கிழக்கின் டாப் 10

2012 புத்தகக்காட்சியின் கிழக்கு ஸ்டால்களில், நான் பார்த்தவரையில் கீழ்க்கண்ட புத்தகங்கள் அதிகம் விற்கின்றன.

1. அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் - ஜெயமோகன் - விலை ரூ 20.



இணையத்தில் அதிகம் விவாதத்துக்குள்ளான கட்டுரைகள், இப்போது புத்தகவடிவில். புத்தகக்காட்சியில், 20 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/978-81-8493-688-9.html

2. ராஜராஜ சோழன் - ச.ந. கண்ணன் - விலை ரூ. 90.



சென்ற புத்தகக்காட்சியில், அதிகம் விற்ற 5 புத்தகங்களில் ஒன்று எனக் குறிப்பிடப்பட்ட ராஜராஜ சோழன், 2012 புத்தகக்காட்சியிலும் சூப்பர்ஹிட்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/978-81-8493-595-0.html

3. பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் - அரவிந்தன் நீலகண்டன்




தலைப்பே இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கத்தைச் சொல்லிவிடுகிறது. 2012 புத்தகக்காட்சியிலிருந்து ஸ்டார் எழுத்தாளராக அடுத்தக் கட்டத்துக்குச் சென்றிருக்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.


4. எக்ஸைல் - சாரு நிவேதிதா - விலை ரூ 250.



கடந்த ஒரு மாதத்தில், அதிகம் பேசப்பட்ட புத்தகம், எக்ஸைல். இதன் அமோக விற்பனை பற்றி பத்ரி எழுதியிருக்கிறார். புத்தகக்காட்சியிலும் ஹிட்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/Charu-Nivedita.html


5. பொன்னியின் செல்வன் ( 5 பாகங்கள்) - கல்கி - விலை ரூ 899.


எப்போதும், புத்தகக்காட்சியின் முதன்மையான ஹீரோ, பொன்னியின் செல்வன்தான். இம்முறை, இன்னும் விசேஷமாக, கிழக்கும் விகடனும் பொன்னியின் செல்வனை வெளியிட்டுள்ளன.

கிழக்கில், பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களும் சேர்த்து மொத்தமாக வாங்கினால் ரூ. 899. தனித்தனியாகவும் வேண்டிய பாகங்களை வாங்கிக்கொள்ளலாம். அப்படி வாங்கிச் சேர்த்தால், மொத்தம் ரூ. 1,100/.


6. வில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன் - விலை ரூ 125.



தமிழ்பேப்பர் புகழ் வில்லாதி வில்லன், வெளிவந்த நாள் முதல் சுடச்சுட விற்பனையாகிக்கொண்டிருக்கிறது.

7. காஷ்மீர் - பா. ராகவன் - விலை ரூ. 140.



பாராவின் சென்ற வருட சூப்பர்ஹிட் நூல், இந்தப் புத்தகக்காட்சியிலும் தொடர்ந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்றுவருகிறது.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/978-81-8493-576-9.html


8. தாயார் சன்னதி - சுகா - விலை ரூ. 180




இது, கிழக்கு வெளியீடல்ல. கிழக்கு விநியோகிக்கும் சொல்வனம் பதிப்பகத்தின் புத்தகம். கிழக்கு ஸ்டால்களில், இந்தப் புத்தகத்தை அள்ளிக்கொண்டு போகிறார்கள்.

மூங்கில் மூச்சுக்குப் பிறகு சுகாவுக்கு ஏராளமான வாசகர்கள் கிடைத்திருக்கிறார்கள். சுகாவின் மூங்கில் மூச்சு, தாயார் சன்னதி இரண்டுமே இப்புத்தகக்காட்சியின் பெஸ்ட் செல்லர்கள்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/100-00-0000-192-5.html

9. 1 & 2 உலகப்போர்கள் - மருதன் - விலை ரூ 170 & 185





முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் ஆகிய மருதனின் இரு புத்தகங்களும் சென்ற புத்தகக்காட்சியில் சக்கைப்போடு போட்டது. இந்தத் தடவையும் அதிக வரவேற்புக்கு உள்ளாகியிருக்கிறது.

முதல் உலகப்போர் - https://www.nhm.in/shop/978-81-8493-587-5.html
இரண்டாம் உலகப்போர் - https://www.nhm.in/shop/978-81-8493-141-9.html

10. உடையும் இந்தியா? - ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் - விலை. ரூ 425.



திராவிடர் கழகம் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த ‘உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?’கூட்டத்தால் இப்புத்தகத்துக்கு நல்ல கவனம் கிடைத்திருக்கிறது. அப்படியென்னதான் எழுதியிருக்கிறார்கள் என்கிற ஆர்வத்தை வாசகர்களிடையே தூண்டியிருக்கிறது திராவிடர் கழகம்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/978-81-8493-310-9.html

Tuesday, September 13, 2011

புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள் - சுஜாதா

1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். 'துருவனும் குகனும்' என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, 'போலீஸ் செய்தி'க்கு அனுப்பாதீர்கள்.

2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். 'பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்' என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.

3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி...

4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.

5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். 'உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.' என்று சொல்வதை விட 'துப்பினான்' என்பது மேல்.

6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். 'அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்... இத்தியாத்திக்குப் பதிலாக, 'அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.

7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதைமாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.

8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட 'போனான்' என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக 'னான்' என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.

9. இரண்டு பக்கமும் நெருக்கமாக எழுதாதீர்கள். நிறைய இடம் விட்டுப் பளிச்சென்று நல்ல பேப்பரில் எழுதுங்கள். முதல் பக்கத்தை மட்டும் மூன்று நான்கு பிரதிகள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வந்தால் உடனே மற்றப் பத்திரிக்கைக்கு அனுப்ப செளகரியம்.

10. பத்திரிக்கை ஆபீசுக்கு நேராகப் போய்க் கதை கொடுக்காதீர்கள். அங்கே கிடக்கும் கதைக் குப்பைகளைப் பார்த்தால் ரொம்பச் சோர்வாக இருக்கும்.

11. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.

(தோரணத்து மாவிலைகள் - சுஜாதா)

Monday, April 04, 2011

பால் ஹரன் பிரசன்னா


இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதும். இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என்று ஹரன் பிரசன்னா என்னிடம் ஆணித்தரமாகச் சொல்லி ஒன்றரை மாதங்களாவது இருக்கும். அதாவது, உலகக்கோப்பை தொடங்கும் முன்பு சொன்ன கணிப்பு. இது ஏதோ சராசரி இந்திய கிரிக்கெட் ரசிகனின் ஆசையாகத்தான் இருக்கிறது என்று அசட்டையாக இருந்துவிட்டேன்.

காலிறுதிப் போட்டியிலேயே தெரிந்துவிட்டது, இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதியில்தான் மோதமுடியும். அப்போதும் அவர் தெளிவாக இருந்தார். காலிறுதியில், ’இண்டியா வில் கிரஷ் ஆஸ்திரேலியா’ என்றபோது அவர் வாய்க்குச் சர்க்கரை போடத் தோன்றியது. செமி ஃபைனலில், இண்டியா வில் கிரஷ் பாகிஸ்தான் என்றார். கிரஷ் என்கிற வார்த்தையை ஒரு வெறியுடன் சொன்னபோது, இந்தியாவின் சாதனை வெற்றியில் எனக்கு பெரிய நம்பிக்கை ஏற்பட்டது.

தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து காலிறுதிப் போட்டியின் ஆரம்பத்தில் யார் பேட்டிங் என்கிற தகவலை வாங்கிவிட்டு நியூசிலாந்து ஜெயித்துவிடும் என்று பட்டென்று கூறிவிட்டார். அணிகளின் தராதரத்தை முன்வைத்துப் பேசுகிறாரா, சும்மா பீலா விடுகிறாரா என்று என்னால் முடிவுகட்ட முடியவில்லை. இந்தியாவிடம் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வி 24 மணி நேரம்கூட ஆகியிருக்காத நிலையில், ஹரன் பிரசன்னாவின் வியூகத்தில் சிக்கிய தென் ஆப்பிரிக்காவும் நியூசிலாந்திடம் மாட்டடி வாங்கித் தோற்றுப் போனது. பாகிஸ்தான், இலங்கை வெற்றிகளையும் போட்டி நடக்கும் ஒருநாள் முன்பே அவர் ஜாதகம் குறித்து வைத்திருந்தார். ஹரன் பிரசன்னா நாக்கில் பிரான்சு பால் ஆக்டோபஸ் குடியமர்ந்து அருள் கூறும் சுவாரசியத்தை வெகுவாக ரசிக்க ஆரம்பித்தேன்.

’அரையிறுதியில், இந்தியா வில் கிரஷ் பாகிஸ்தான் அண்ட் ஸ்ரீலங்கா வில் கிரஷ் நியூசிலாந்து; ஃபைனல்ல இந்தியா வில் கிரஷ் ஸ்ரீலங்கா’ என்று நாக் அவுட் முடிவுகளை கிழக்கிலிருந்த அத்தனை பேர் முன்பும் முன்னறிவிப்பாக வெளியிட்டார் பிரசன்னா, துளிகூட பயமோ தயக்கமோ இல்லாமல்.

கரி நாக்கு. ஒன்றுகூட பிசகவில்லை. நியூசிலாந்து காலிறுதியில் ஜெயித்தவுடன், ’அரையிறுதியில் டாஸ் முடிவுகள்கூட சொல்லணும்’ என்று சீண்டிப் பார்த்தேன். ’அரையிறுதியில், நியூசிலாந்தும் இந்தியாவும் டாஸ் வின் பண்ணும். நியூசிலாந்து தோற்கும். இண்டியா வில் கிரஷ்..’. டாஸ் கணிப்புகூட சாட்சாத் பலித்தபோது நான் அரண்டு போய்விட்டேன். இதனால், இறுதிப் போட்டியில், பூனம் பாண்டேவின் நி. ஓட்டத்தை விடவும் ஹரன் பிரசன்னாவின் வாக்கு பலிப்பதில்தான் என் ஆர்வம் மிகுதியாக இருந்தது.

இறுதிப் போட்டியன்று, டாஸ் பற்றிக் கேட்க மறந்துவிட்டேன். பிறகு, டாஸில் சங்ககரா செய்த குழப்பத்துக்கு மேட்ச் ரெஃப்ரி தடுமாறியபோதுதான் ஹரன் பிரசன்னா ஞாபகத்துக்கு வந்தார். இந்தியாவின் சேஸிங்கில், ஆரம்பத்திலேயே ஷேவாக், சச்சினின் விக்கெட்டுகள் வரிசையாக விழ, பயந்துபோய் ஹரன் பிரசன்னாவுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன். ’இண்டியா வில் வின் தி கப்.’ என்று அசராமல் பதில் வந்து விழுந்தது.

Thursday, March 10, 2011

கிஉகோ 3 - சென்னை சூப்பர் கிங்ஸ் 11

உலகக் கோப்பைப் போட்டி முடிந்த அடுத்த ஆறாவது நாள் ஐபிஎல் 4 தொடங்குகிறது. இந்தத் தடவை சென்னை சூப்பர் கிங்ஸின் பலம் சற்றே கூடியிருப்பதை உணரமுடிகிறது. என் இறுதி 11.

மைக் ஹஸ்ஸி
முரளி விஜய்
சுரேஷ் ரைனா
பத்ரிநாத்
தோனி
ஆல்பி மார்கல்
பிராவோ/ஸ்டிரைஸ்
அனிருத்/யோ மகேஷ்
அஸ்வின்
ஜகாதி
பொலிஞ்சர்/ஹில்பெனாஸ்

ஏழு பேட்ஸ்மேன்களே அதிகம் என்றால் அனிருத்துக்குப் பதிலாக சுதீப் தியாகி. பொலிஞ்சர்/ஹில்பெனாஸ் அணியில் இருப்பதால் குலசேகரா ட்ரிங்ஸ் கொண்டுவரும் சாத்தியமே அதிகம். ஜகாதியின் அருமைபெருமை நீடிக்கும் பட்சத்தில் ரந்தீவுக்கும் வாய்ப்பில்லை. ஆனாலும் தோனியின் நெடுநாள் தோழர் ஜொகிந்தர் சர்மா அணியில் தொடர்ந்து நீடிப்பதுதான் எனக்குக் கிலியை ஏற்படுத்துகிறது.

மாடாய் உழைத்து ரன்களைக் குவிக்கும் முகுந்துக்கு சென்னை அணியில் இடமில்லை. ஹஸ்ஸியால் விளையாடமுடியாத நிலைமையில் அனிருத் ஓபனராகிவிடுவார். முகுந்த், அடுத்த ஷரத் ஆகிவிடக்கூடாது.

(உலகக்கோப்பை மிகவும் போரடிக்கிறது. அதுவும் க்ரூப் ஏ சுத்தம். போட்டி மனப்பான்மையே இல்லை. அதனால்தான் இந்த ஐபிஎல் தாவல்.)

Friday, March 04, 2011

கிஉகோ 2 - சச்சினின் நெ.1 ரசிகர்

எங்கு திரும்பினாலும் கிரிக்கெட்தான் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகைகளில் உலகக்கோப்பை தொடர்கள், இணையத்தில் மேட்ச் ரிப்போர்ட் பதிவுகள் என்று உலகக்கோப்பையை முன்னிட்டு, தமிழில் நிறைய கட்டுரைகள் சுறுசுறுப்பாக எழுதப்படுகின்றன. சேனல்களில் ஸ்பெக்ட்ரம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. முன்னாள் கிரிக்கெட் புள்ளிகள், நிற்கிறார்களா உட்காந்துகொண்டிருக்கிறார்களா என்று கண்டுபிடிக்கமுடியாத உயர்ந்த நாற்காலிகளில் அமர்ந்து, காலாட்டியபடி, பழைய உலகக்கோப்பை அனுபவங்களை சாவகாசமாக அசைபோடுகிறார்கள். இரண்டு நிமிடங்களுக்கு ஒருவர் என்கிற குறும்பேட்டிகளிலிருந்து ஒரு தகவலையும் உருப்படியாகப் பெறமுடியவில்லை.

கிழக்கில், உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு என்கிற ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.விலை ரூ 50 மட்டும். பெட்டிக் கடைகளிலும் கிடைக்கிறது. இந்த நூலை மிக சுவாரசியமாக எழுதி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார் நூலாசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. தமிழில் கிரிக்கெட் பற்றி இன்னமும் நிறைய கிரிக்கெட் புத்தகங்கள் வெளிவரவேண்டும். வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த் போன்ற தமிழ்நாட்டு கிரிக்கெட் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட வேண்டும். (ஆனால் கபில்தேவ் சுயசரிதை போல உப்புசப்பில்லாமல் கடனே என்று இருந்துவிடக் கூடாது).

ட்விட்டர் வழியாகத் தென்பட்ட ஓர் ஆங்கில இணையத்தளம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. http://spacemanspiffonthe3rdrock.blogspot.com . கட்டுரைகள் எழுதும் மோஹித் சர்தனா, இந்தியா ஆடுகிற அனைத்து உலகக்கோப்பை ஆட்டங்களையும் நேரில் பார்த்து (அயர்லாந்துடனான இந்தியாவின் ஆட்டத்தையும் மட்டும் குறைத்து எடைபோட்டு டிக்கெட் வாங்காமல் விட்டுவிட்டார்), மைதானத்தில் ஒரு பார்வையாளராகத் தனக்குக் கிடைக்கும் அனுபவங்களை ஒன்றுவிடாமல், விவரமாக எழுதி வருகிறார். மூவர்ணக் கொடியை முகம் உள்பட உடல்முழுக்க வரைந்துகொண்டு இந்தியக் கொடியை வீசியபடி இந்திய மைதானங்கள் தவறாமல் தென்படும் சச்சின் ரசிகரான சுதிர் குமார் கெளதமை மோஹித் பேட்டி கண்டு, சுவாரசியமான தகவல்களைப் பெற்றிருக்கிறார். யாரைவிடவும் அவரே சச்சினின் நெ.1 ரசிகர் என்று சான்றிதழ் அளிக்கிறார் மோஹித். மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்தபிறகு வேண்டுமானால் இப்படி கிரிக்கெட்டே கதி என்று வாழலாம்.