Thursday, August 01, 2013

நான் பிறந்தேன்!

(2008ல், தமிழோவியம் மின் இதழுக்காக எழுதியது.)

திடீரென்று ஒருநாள், என் அம்மாவுக்கு நான் பிறந்த நேரம் தொடர்பாக சிறு குழப்பம் ஏற்பட்டது. என்னுடைய பிறந்த நேரத்தைக் குறித்துக்கொண்டதில் ஒருவேளை பிழை ஏற்பட்டிருக்கலாமோ என்கிற சந்தேகம் எழுந்ததால் அதை உடனடியாகத் தீர்த்துவிடுவது என்று எங்கள் குடும்பத்தின் ஒரே சென்னைப் பிரதிநிதியான என்னை அணுகினார்கள்.  நேரப்பிழையால் ஒருவேளை என் ஜாதகம்  தலைகீழாக மாறியிருந்தால் உடனடியாக அதைச் செப்பனிடவேண்டும்.  சரியான பிறந்த நேரத்துக்கும் ஜாதகத்தில் உள்ள நேரத்துக்கும் ஒருமணிநேர இடைவெளி இருந்தால் என் ஜாதகம் உடனடியாக மாற்றப்படவேண்டும்.

அட! கேட்கவே சுவாரசியமாக இருந்தது. ஒருவேளை என் ஜாதகம் மாறிப்போய், புதிய நேரத்தை வைத்து என் ஜாதகத்தைக் கணிக்கும் ஜோதிடர், ’அம்மா, உங்கள் மகனுக்கு சொர்க்க வாழ்க்கை. மக்கள் அவன் பின்னால் செல்வார்கள்’ என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டால் அது கேட்பதற்கு எவ்வளவு ரம்மியமாக இருக்கும். நடக்கிறதோ இல்லையோ, இதுபோல யாராவது சொல்வதுபோல் காட்சிப்படுத்திப் படுத்திப் பார்ப்பதில் ஓர் இன்பக் கிளுகிளுப்பு  இருக்கவே செய்கிறது. 

இங்கே ஒரு கிளைக்கதை. நான் தெய்வச்செயலால்தான் பிறந்தேன் என்று அம்மா இன்றுவரை பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பார். 1977ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி பிரசவ வலி வந்த அம்மாவை அலுவலகத்திலிருந்து சம்பளக் கவரோடு வந்த தாத்தா உடனடியாக எழும்பூருக்கு அழைத்துச் சென்றார். அம்மாவைப் பரிசோதித்த மருத்துவர், ஒரு கையை மட்டும் விரித்துவிட்டார். ’பிரசவம் சிக்கலாக இருக்கும் போலிருக்கு, தாய்க்குப் பாதிப்பு வரலாம்’ என்று சொல்லி ஒரு விண்ணப்படிவத்தில் தாத்தாவிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார். சிறிய உயிருக்கு ஆபத்தானாலும் பரவாயில்லை. பெரிய உயிரை காப்பாற்றினால் போதும் என்று என் தாத்தாவும் பெண் பாசத்தில் எழுதிக்கொடுத்துவிட்டார். இப்படியொரு ஒப்பந்தம் ஏற்பட்டபின்தான் மருத்துவர் கத்தியைக் கையில் எடுத்திருக்கிறார். சில மணி நேரங்கள் கழித்து என் தாத்தாவைப் பார்த்த மருத்துவர் சொன்னது - தாயும் சேயும் நலம்! பிறக்கும்முன்பே கையூன்றி கரணம் போடவேண்டிய நிலை பாருங்கள் எனக்கு!

நிலவைத் தொட்டுவர ஒரு பைத்தியக்காரக் குருவி முயன்றதுபோல என் பிறப்புக்கான ஆதாரங்களைத் தேடி எழும்பூர் மருத்துவமனைக்குச் சென்றேன். எழும்பூர் அரசு மருத்துவமனையின் பின்னால் ஒரு பாழடைந்த கட்டடம் இருக்கிறது. அங்கு பிறப்புத் தகவல்கள் அடங்கிய  கோப்புகள் பராமரிக்கப்படுகின்றன.  பச்சைக் குழந்தையாக என்னை அங்கிருந்து வெளியே கொண்டுவந்ததோடு சரி, முப்பது வருடங்கள் கழித்து மீண்டும் அதனுள் நுழைகிறேன். என்னை எந்த மருத்துவர் பிழைக்கவைத்தார்? ஆள், விவரம் தெரிந்தால் ஒரு கிலோ ஆப்பிள் வாங்கித் கொண்டுபோய் கொடுத்து அவர் காலில் சாஷ்டாங்கமாக விழலாமே! என்னை முதலில் தூக்கிய நர்ஸ் என்னை என்ன சொல்லி  வாழ்த்தியிருப்பார்! என் கன்னத்தை எத்தனை முறை கிள்ளிப் பார்த்திருப்பார்? பலவிதமான கற்பனைகளுக்குள் மிதந்தபடி சென்றேன்.

சித்திரம் வரைந்தாற்போல பளிச்சென்று இருக்கின்றன தனியார் மருத்துவமனைகள். அதேசமயம், சகித்துக்கொள்ள முடியாத ஓர் ஒழுங்கீனத்தில் இருக்கின்றன அரசு மருத்துவமனைகள். எழும்பூர் மருத்துவமனையைச் சுற்றி எங்கு பார்த்தாலும் அசுத்தம். குப்பை மேடுகள். தினசரி நூறு குழந்தைகள் ஜனிக்கும் இடமாக இருந்தாலும் எல்லோரும் நடுநடுங்கிச் சாகும் இடத்தில் வந்து மாட்டிக்கொண்டதுபோல இருந்தது. கூட்டம் கூட்டமாக தாய்மார்கள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே இரைச்சலாக இருந்தது. ஒரு சுகாதரமற்ற மருத்துவமனையில் தங்களுடைய சந்ததி உருவாகப்போகிறது என்கிற கவலை யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை.  சரி, பணக்கார வீடுகளில் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்த்து  கொசுக்களிடமிருந்தும் அசுத்தங்களிடமிருந்தும் காப்பாற்றுகிறார்களே! ஆனால் இங்கே கொசுக்களுக்கும் குப்பைக் கூளங்களுக்கும் மத்தியில் பிறக்கும் குழந்தைகள் எப்படி உயிர் வாழ்கின்றன? அல்லது ஆரோக்கியமான தேகம் பெறுகின்றன? அல்லது இதுபோன்ற சூழலில் பிறந்த  காரணத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுகிறார்களா! எழும்பூர் கொசுக்களுக்கு மத்தியில் பிறந்தவன் என்பதால் எனக்கும் கொசுக்கடி பழகிவிட்டது. இன்றுவரை என் வீட்டில்  கொசு எதிர்ப்புச் சாதனங்கள் என்று எதுவும் கிடையாது.

எழும்பூர் மருத்துவமனையில் என்னை அசைத்துப் பார்த்த இன்னொன்று - அறிவிப்புப் பலகைகள். ’குழந்தை திருடர்கள் ஜாக்கிரதை’ என்று பல இடங்களில் அறிவுறுத்தப்பட்டிருந்ததைக் கண்டு ஆடிப்போனேன். பச்சைக் குழந்தைகளைத் திருடிக்கொண்டுபோய் என்ன செய்வார்கள்? சாலை ஓரங்களில் இதுபோல திருடப்பட்ட குழந்தைகளைக் கையில் ஏந்தித்தான் பிச்சை எடுக்கிறார்களா? ஐய்யோ!

என் தேவையைப் பூர்த்தி செய்யப்போகும் அலுவலகம் குகை மனிதர்கள் வாழும் இடம்போல காட்சியளித்தது. வெயிலின் தகிப்பை உள்ளே உணரமுடிந்தது. பழங்கால மேஜை, சேரில் ஒரு பெண் அதிகாரி அமர்ந்திருந்தார். அவர் தலைக்கு மேலே இருந்த பேன் விடாமல் கீச்சு குரல் எழுப்பிக்கொண்டிருந்தது. குழந்தை பிறந்த தேதியும் பெண்ணின் பெயர், அவரது கணவர் பெயர் ஆகிய மூன்றையும் சொன்னால் உடனே பிறந்த நேரத்தை ஒரு வெள்ளைச் சீட்டில் எழுதிக் கொடுத்துவிடவேண்டும் என்பது அரசு ஆணை. ’1977, ஆகஸ்ட் 1ல நான் பிறந்தேன். அந்தத் தகவல் சரிபார்க்கவேண்டும்’ என்று தயங்கிய குரலில் சொன்னேன். அந்த அதிகாரியின் கண்ணில் மெல்லிய அதிர்ச்சி உண்டானது. ’அங்க உக்காருங்க. இருக்கானு பார்க்கறேன்’ என்று ஓர் ஊழியரை அழைத்தபடி எனக்கு ஒரு மேஜையைக் காண்பித்தார். அதெப்படி 30 வருடத்துக்கு முன்னால் பதிவு செய்யப்பட்ட என் பிறப்பு ஆவணம் நான் கேட்டவுடன் என் கைக்குக் கிடைக்கும்? துளியும் நம்பிக்கையில்லாமல் காக்க ஆரம்பித்தேன்.

ஐந்து நிமிடத்தில் ஒரு பெரிய நோட்டோடு ஊழியர் என்னை நோக்கி வந்தார். அது 1977-ம் ஆண்டுக்கான பிறப்புப்  பதிவுப் புத்தகம். எனக்கு லேசாக சிலிர்க்க ஆரம்பித்தது. ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக்கொண்டே வந்தவர், ஓர் இடத்தில் நிறுத்தினார்.

வெளுத்துப்போன தாள்களைக் கொண்ட அந்தப் பதிவேட்டில் என் அம்மாவின் பெயரும் என் அப்பாவின் பெயரும் கண்ணில் பட்டது. நிச்சயம் என் பெயர் அதில் எழுதப்பட்டிருக்காது. வீட்டுக்கு என்னை தூக்கிக்கொண்டு வந்தபிறகு  அப்பா, அம்மாவின் பெற்றோர்கள் ஆளுக்கு ஒரு பெயர் (கண்ணன், செந்தில்) சூட்டிவிட்டார்கள். இங்கே என் அம்மாவின் பெயர்தான் அடையாளம். நான் பிறந்த நேரமும் என் தாத்தாவின் முகவரியும் என என் பிறப்பு தொடர்பான அத்தனைத் தகவல்களும் ஒரே நேர்க்கோட்டில் இங்க் பேனாவினால் பூர்த்தி செய்யப்பட்டிருந்தன. நான் பிறந்த தினத்தன்று பதிவு செய்யப்பட்ட பிறப்பு விவரத்தை அடுத்த முப்பது வருடங்கள் கழித்து, வளர்ந்து ஆளாகி நான் பார்த்தபோது கால்மாட்டில் பூமி தாலாட்டுவதுபோல இருந்தது.

நல்லவேளை, என் ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நேரத்துக்கும் மருத்துவனை பதிவேட்டில் உள்ள நேரத்துக்கும் சில நிமிட இடைவெளிதான் இருந்தது. ஜாதகத்தில் அடித்தல் திருத்தல் எதுவும் வேண்டியதில்லை. 

திடீரென அந்தச் சமயத்தில் குழந்தை திருடர்கள் பற்றிய ஞாபகம் வந்து தொலைத்தது. ஒருவேளை என் அம்மாவுக்குப் பெண் குழந்தை பிறந்து, பாதகர்கள் அதை யாருக்கும் தெரியாமல் கபளீகரம் செய்து, குழந்தையை மாற்றி... சே, திருடுபவர்கள் போயும் போயும் பெண் குழந்தையையா திருடுவார்கள்! மார்க்கெட்டில் ஆண் குழந்தைகளுக்கு அல்லவா கடும் கிராக்கி!

தகவலைக் குறித்துக்கொண்டே திருட்டுப் பார்வையால் பதிவுப் புத்தகத்தை ஊடுறுவினேன். என் அம்மாவின் பெயருக்கு நேராக ஆண் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது. அப்பாடா! என்னை யாரும் திருடிக் கொண்டு போகவில்லை.

(நன்றி: http://www.tamiloviam.com/unicode/12110804.asp)