Thursday, September 23, 2010

களவாணி, லே கிராண்ட் வாயேஜ்



பொதுவாக எந்தத் தமிழ் சினிமா பார்க்க நேர்ந்தாலும் அதன் மோசமான திரைக்கதை, படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் இம்சை கொடுக்க ஆரம்பித்து மீதிப்படத்தில் கவனம் செலுத்த முடியாமல் துன்புறச் செய்துவிடும். தமிழ் சினிமாவில் முக்கியமான பிரச்னையாக இருப்பது, கதை சொல்லல் முறை. ஆனால், களவாணியில் இப்படிப்பட்ட தடங்கல்கள் எதுவும் இல்லை. முதல் காட்சியிலிருந்து படம் வழுக்கிக்கொண்டு செல்கிறது.

படம் ஆரம்பித்த சில காட்சிகளிலேயே படத்தின் கதை தெளிவாகத் தெரிந்துவிடுகிறது. இரண்டு கிராமத்துக்கும் ஜென்மப்பகை. கோயில் விவகாரத்தில் ஆரம்பித்து பல பிரச்னைகளில் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பூசலுக்கு மத்தியில், இரு ஊரைச் சேர்ந்த இளசுகள் காதலிக்க ஆரம்பிக்கின்றன. இதில் காதலனும் காதலியின் அண்ணனும் எதிரிகள். இப்படி ஓர் எளிமையான கதைதான் களவாணியில்.

படத்திலுள்ள அத்தனை கதாபாத்திரங்களிலும் உயிரோட்டம் உள்ளது. கதாநாயகி ஓவியா பார்க்க லட்சணமாக, அதுவும் அந்தத் துபாய்ச் சேலையை அணிந்துகொண்டு திருவிழாவுக்கு வருகிற காட்சியில் அவரே திருவிழாவுக்குரிய அழகில் ஜொலிக்கிறார். தெனாவெட்டான ஆசாமியாக நடித்துள்ள விமலின் கதாபாத்திரத்தை வேறு கதாநாயகனிடம் கொடுத்திருந்தால் படத்தின் தன்மையே மாறிப்போயிருக்கக்கூடும். கஞ்சா கறுப்புவின் காமெடி, வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளுக்கு நிகராக அமைந்துவிட்டது. காதலர்களின் ஊடலும் கூடலும் படம் முழுக்க நீள்கிறது. ஆனால், துளிகூட போரடிக்கவில்லை. சற்குணத்திடம் பாக்கியராஜின் திரைக்கதை உத்தியின் சாயல் நிறையவே இருக்கிறது. இதுவும் நகைச்சுவைப் படம்தான், காதல் படம்தான் என்றாலும் நடிகர்களின் இயல்பான நடிப்பும் அழகான லொகேஷன்களும் படத்தின்மீது காதலை உருவாக்கிவிடுகிறது. களவாணி படத்தை நான் அவ்வளவு குதூகலமாகப் பார்த்து முடித்தேன்.



பலநூறு பக்க நாவல் ஏற்படுத்துகிற தாக்கத்தை லே கிராண்ட் வாயேஜ் என்கிற ஒண்ணே முக்கால் மணிநேர ப்ரெஞ்ச் படம் ஏற்படுத்திவிட்டது. (எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைத்தவுடன் அடித்துப் பிடித்துப் பார்த்தேன். கதையை அவ்வளவு அழகாக எழுதிருந்தார் அவர்.)

உலகம் முழுக்க அப்பாக்களுக்கும் மகன்களுக்குமான உறவு ஒரே விகிதத்தில்தான் இருக்கிறது. படித்த இளைஞனாக இருந்தாலும் தந்தையின் செயல்களையும் கட்டளைகளையும் சரிவரப் புரிந்துகொள்ள முடிவதில்லை. எந்தவொரு மகனும் அவன் தந்தைக்கு சொல் பேச்சுக் கேளாதவனாகவும் வாழ்க்கையை வீணடித்துப் பொழுதைப் போக்குபவனாகவுமே அறியப்படுகிறான். இதுபோன்ற வேறுபாடுகளில் வாழ்கிற அப்பாவும் மகனும் நீண்ட தொலைவில் உள்ள மெக்காவுக்குக் காரில், அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து பயணம் மேற்கொண்டால் என்ன நடக்கும்? லே கிராண்ட் வாயேஜ் படத்தின் கதை எளிமையாக இருந்தாலும் அதன் உள்ளடக்கமும் சினிமாவுக்கான மொழியும் படத்தை மற்றொரு தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன.

அசோகமித்திரனின் சிறுகதை படிப்பதுபோல படம் அலட்டிக் கொள்ளாமல் நகர்கிறது. பத்து நாடுகளுக்குப் பயணம் செய்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் இஸ்மயில் ஃபரூக்கி. பல காட்சிகளில் நுணுக்கமாக விஷயங்களைப் புதைத்துவிட்டு, நீயே கண்டுபிடித்துக்கொள் என்று பார்வையாளர் பொறுப்பில் விட்டுவிடுகிறார். படத்தில் வசனங்கள் மிகக்குறைவு. பேசப்படுகிற ஒவ்வொரு வசனமும் கதையை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச்
செல்லவே உதவுகிறது. ஒரு சின்ன உதாரணம். அப்பாவுக்கு இறைவனே எல்லாமும். ஆனால், அவருடைய மகன் கடவுள் நம்பிக்கை, கடவுள் வழிபாடு போன்ற விஷயத்தில் எப்போதும் பெரிய ஈடுபாடு இல்லாதவன். ஒரு காட்சியில், மகனின் மோசமாக செயலுக்காகக் கோபப்படும் அப்பா, காரில் ஏறாமல் ஒரு வீம்புடன் தனியே நடந்து செல்கிறார். மகன் என்ன சொல்லியும் காரில் ஏறாமல் அவர் பாட்டுக்குப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடக்கிறார். உடனே மகன் கேட்கிறான், ’உங்கள் மதத்தில் மன்னிப்புக்கு இடமே இல்லையா?’ மகனின் கேள்வியில் ஊசியில் குத்தியதுபோல உணர்ந்த தந்தை பேசாமல் நடந்துவந்து காருக்குள் ஏறிக்கொள்கிறார்.

படத்தின் அப்பாவும் மகனுமாக நடித்தவர்களின் நடிப்பு எந்தவொரு சிறந்த நடிப்புக்கும் சவால் விடக்கூடியது. படம் பார்க்கிற உணர்வே இல்லாமல் காரின் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு நடக்கும் அத்தனையையும் வேடிக்கை பார்க்கும் உணர்வைக் கொண்டுவந்து விடுகிறார்கள். சினிமா வரலாற்றிலேயே மெக்காவில் முதல்முறையாக படமாக்கப்பட்ட காட்சிகள் ஏற்படுத்துகிற பிரமிப்பும் கதையின் இறுதிக்கட்ட காட்சிகளினால் உண்டாகும் பாதிப்பும் அவ்வளவு சுலபமாக மற்ற படங்களில் கிடைத்துவிடாத அனுபவங்கள்.

Thursday, September 16, 2010