Tuesday, September 13, 2011

புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள் - சுஜாதா

1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். 'துருவனும் குகனும்' என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, 'போலீஸ் செய்தி'க்கு அனுப்பாதீர்கள்.

2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். 'பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்' என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.

3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி...

4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.

5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். 'உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.' என்று சொல்வதை விட 'துப்பினான்' என்பது மேல்.

6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். 'அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்... இத்தியாத்திக்குப் பதிலாக, 'அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.

7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதைமாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.

8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட 'போனான்' என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக 'னான்' என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.

9. இரண்டு பக்கமும் நெருக்கமாக எழுதாதீர்கள். நிறைய இடம் விட்டுப் பளிச்சென்று நல்ல பேப்பரில் எழுதுங்கள். முதல் பக்கத்தை மட்டும் மூன்று நான்கு பிரதிகள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வந்தால் உடனே மற்றப் பத்திரிக்கைக்கு அனுப்ப செளகரியம்.

10. பத்திரிக்கை ஆபீசுக்கு நேராகப் போய்க் கதை கொடுக்காதீர்கள். அங்கே கிடக்கும் கதைக் குப்பைகளைப் பார்த்தால் ரொம்பச் சோர்வாக இருக்கும்.

11. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.

(தோரணத்து மாவிலைகள் - சுஜாதா)

Monday, April 04, 2011

பால் ஹரன் பிரசன்னா


இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதும். இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என்று ஹரன் பிரசன்னா என்னிடம் ஆணித்தரமாகச் சொல்லி ஒன்றரை மாதங்களாவது இருக்கும். அதாவது, உலகக்கோப்பை தொடங்கும் முன்பு சொன்ன கணிப்பு. இது ஏதோ சராசரி இந்திய கிரிக்கெட் ரசிகனின் ஆசையாகத்தான் இருக்கிறது என்று அசட்டையாக இருந்துவிட்டேன்.

காலிறுதிப் போட்டியிலேயே தெரிந்துவிட்டது, இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதியில்தான் மோதமுடியும். அப்போதும் அவர் தெளிவாக இருந்தார். காலிறுதியில், ’இண்டியா வில் கிரஷ் ஆஸ்திரேலியா’ என்றபோது அவர் வாய்க்குச் சர்க்கரை போடத் தோன்றியது. செமி ஃபைனலில், இண்டியா வில் கிரஷ் பாகிஸ்தான் என்றார். கிரஷ் என்கிற வார்த்தையை ஒரு வெறியுடன் சொன்னபோது, இந்தியாவின் சாதனை வெற்றியில் எனக்கு பெரிய நம்பிக்கை ஏற்பட்டது.

தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து காலிறுதிப் போட்டியின் ஆரம்பத்தில் யார் பேட்டிங் என்கிற தகவலை வாங்கிவிட்டு நியூசிலாந்து ஜெயித்துவிடும் என்று பட்டென்று கூறிவிட்டார். அணிகளின் தராதரத்தை முன்வைத்துப் பேசுகிறாரா, சும்மா பீலா விடுகிறாரா என்று என்னால் முடிவுகட்ட முடியவில்லை. இந்தியாவிடம் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வி 24 மணி நேரம்கூட ஆகியிருக்காத நிலையில், ஹரன் பிரசன்னாவின் வியூகத்தில் சிக்கிய தென் ஆப்பிரிக்காவும் நியூசிலாந்திடம் மாட்டடி வாங்கித் தோற்றுப் போனது. பாகிஸ்தான், இலங்கை வெற்றிகளையும் போட்டி நடக்கும் ஒருநாள் முன்பே அவர் ஜாதகம் குறித்து வைத்திருந்தார். ஹரன் பிரசன்னா நாக்கில் பிரான்சு பால் ஆக்டோபஸ் குடியமர்ந்து அருள் கூறும் சுவாரசியத்தை வெகுவாக ரசிக்க ஆரம்பித்தேன்.

’அரையிறுதியில், இந்தியா வில் கிரஷ் பாகிஸ்தான் அண்ட் ஸ்ரீலங்கா வில் கிரஷ் நியூசிலாந்து; ஃபைனல்ல இந்தியா வில் கிரஷ் ஸ்ரீலங்கா’ என்று நாக் அவுட் முடிவுகளை கிழக்கிலிருந்த அத்தனை பேர் முன்பும் முன்னறிவிப்பாக வெளியிட்டார் பிரசன்னா, துளிகூட பயமோ தயக்கமோ இல்லாமல்.

கரி நாக்கு. ஒன்றுகூட பிசகவில்லை. நியூசிலாந்து காலிறுதியில் ஜெயித்தவுடன், ’அரையிறுதியில் டாஸ் முடிவுகள்கூட சொல்லணும்’ என்று சீண்டிப் பார்த்தேன். ’அரையிறுதியில், நியூசிலாந்தும் இந்தியாவும் டாஸ் வின் பண்ணும். நியூசிலாந்து தோற்கும். இண்டியா வில் கிரஷ்..’. டாஸ் கணிப்புகூட சாட்சாத் பலித்தபோது நான் அரண்டு போய்விட்டேன். இதனால், இறுதிப் போட்டியில், பூனம் பாண்டேவின் நி. ஓட்டத்தை விடவும் ஹரன் பிரசன்னாவின் வாக்கு பலிப்பதில்தான் என் ஆர்வம் மிகுதியாக இருந்தது.

இறுதிப் போட்டியன்று, டாஸ் பற்றிக் கேட்க மறந்துவிட்டேன். பிறகு, டாஸில் சங்ககரா செய்த குழப்பத்துக்கு மேட்ச் ரெஃப்ரி தடுமாறியபோதுதான் ஹரன் பிரசன்னா ஞாபகத்துக்கு வந்தார். இந்தியாவின் சேஸிங்கில், ஆரம்பத்திலேயே ஷேவாக், சச்சினின் விக்கெட்டுகள் வரிசையாக விழ, பயந்துபோய் ஹரன் பிரசன்னாவுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன். ’இண்டியா வில் வின் தி கப்.’ என்று அசராமல் பதில் வந்து விழுந்தது.

Thursday, March 10, 2011

கிஉகோ 3 - சென்னை சூப்பர் கிங்ஸ் 11

உலகக் கோப்பைப் போட்டி முடிந்த அடுத்த ஆறாவது நாள் ஐபிஎல் 4 தொடங்குகிறது. இந்தத் தடவை சென்னை சூப்பர் கிங்ஸின் பலம் சற்றே கூடியிருப்பதை உணரமுடிகிறது. என் இறுதி 11.

மைக் ஹஸ்ஸி
முரளி விஜய்
சுரேஷ் ரைனா
பத்ரிநாத்
தோனி
ஆல்பி மார்கல்
பிராவோ/ஸ்டிரைஸ்
அனிருத்/யோ மகேஷ்
அஸ்வின்
ஜகாதி
பொலிஞ்சர்/ஹில்பெனாஸ்

ஏழு பேட்ஸ்மேன்களே அதிகம் என்றால் அனிருத்துக்குப் பதிலாக சுதீப் தியாகி. பொலிஞ்சர்/ஹில்பெனாஸ் அணியில் இருப்பதால் குலசேகரா ட்ரிங்ஸ் கொண்டுவரும் சாத்தியமே அதிகம். ஜகாதியின் அருமைபெருமை நீடிக்கும் பட்சத்தில் ரந்தீவுக்கும் வாய்ப்பில்லை. ஆனாலும் தோனியின் நெடுநாள் தோழர் ஜொகிந்தர் சர்மா அணியில் தொடர்ந்து நீடிப்பதுதான் எனக்குக் கிலியை ஏற்படுத்துகிறது.

மாடாய் உழைத்து ரன்களைக் குவிக்கும் முகுந்துக்கு சென்னை அணியில் இடமில்லை. ஹஸ்ஸியால் விளையாடமுடியாத நிலைமையில் அனிருத் ஓபனராகிவிடுவார். முகுந்த், அடுத்த ஷரத் ஆகிவிடக்கூடாது.

(உலகக்கோப்பை மிகவும் போரடிக்கிறது. அதுவும் க்ரூப் ஏ சுத்தம். போட்டி மனப்பான்மையே இல்லை. அதனால்தான் இந்த ஐபிஎல் தாவல்.)

Friday, March 04, 2011

கிஉகோ 2 - சச்சினின் நெ.1 ரசிகர்

எங்கு திரும்பினாலும் கிரிக்கெட்தான் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகைகளில் உலகக்கோப்பை தொடர்கள், இணையத்தில் மேட்ச் ரிப்போர்ட் பதிவுகள் என்று உலகக்கோப்பையை முன்னிட்டு, தமிழில் நிறைய கட்டுரைகள் சுறுசுறுப்பாக எழுதப்படுகின்றன. சேனல்களில் ஸ்பெக்ட்ரம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. முன்னாள் கிரிக்கெட் புள்ளிகள், நிற்கிறார்களா உட்காந்துகொண்டிருக்கிறார்களா என்று கண்டுபிடிக்கமுடியாத உயர்ந்த நாற்காலிகளில் அமர்ந்து, காலாட்டியபடி, பழைய உலகக்கோப்பை அனுபவங்களை சாவகாசமாக அசைபோடுகிறார்கள். இரண்டு நிமிடங்களுக்கு ஒருவர் என்கிற குறும்பேட்டிகளிலிருந்து ஒரு தகவலையும் உருப்படியாகப் பெறமுடியவில்லை.

கிழக்கில், உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு என்கிற ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.விலை ரூ 50 மட்டும். பெட்டிக் கடைகளிலும் கிடைக்கிறது. இந்த நூலை மிக சுவாரசியமாக எழுதி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார் நூலாசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. தமிழில் கிரிக்கெட் பற்றி இன்னமும் நிறைய கிரிக்கெட் புத்தகங்கள் வெளிவரவேண்டும். வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த் போன்ற தமிழ்நாட்டு கிரிக்கெட் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட வேண்டும். (ஆனால் கபில்தேவ் சுயசரிதை போல உப்புசப்பில்லாமல் கடனே என்று இருந்துவிடக் கூடாது).

ட்விட்டர் வழியாகத் தென்பட்ட ஓர் ஆங்கில இணையத்தளம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. http://spacemanspiffonthe3rdrock.blogspot.com . கட்டுரைகள் எழுதும் மோஹித் சர்தனா, இந்தியா ஆடுகிற அனைத்து உலகக்கோப்பை ஆட்டங்களையும் நேரில் பார்த்து (அயர்லாந்துடனான இந்தியாவின் ஆட்டத்தையும் மட்டும் குறைத்து எடைபோட்டு டிக்கெட் வாங்காமல் விட்டுவிட்டார்), மைதானத்தில் ஒரு பார்வையாளராகத் தனக்குக் கிடைக்கும் அனுபவங்களை ஒன்றுவிடாமல், விவரமாக எழுதி வருகிறார். மூவர்ணக் கொடியை முகம் உள்பட உடல்முழுக்க வரைந்துகொண்டு இந்தியக் கொடியை வீசியபடி இந்திய மைதானங்கள் தவறாமல் தென்படும் சச்சின் ரசிகரான சுதிர் குமார் கெளதமை மோஹித் பேட்டி கண்டு, சுவாரசியமான தகவல்களைப் பெற்றிருக்கிறார். யாரைவிடவும் அவரே சச்சினின் நெ.1 ரசிகர் என்று சான்றிதழ் அளிக்கிறார் மோஹித். மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்தபிறகு வேண்டுமானால் இப்படி கிரிக்கெட்டே கதி என்று வாழலாம்.

Monday, February 28, 2011

கிஉகோ 1 - வாசிப்பு


கிரிக்கெட் திருவிழா சமயம் என்பதால் சுவாரசியமாகப் படிக்க நிறைய கட்டுரைகள் கிடைக்கின்றன. கல்கியில் உலகக்கோப்பை பற்றி எழுதி வருகிறேன். அவ்வப்போது இங்கும் எழுதலாம் என்றிருக்கிறேன். நிச்சயம், மேட்ச் ரிப்போர்ட் அல்ல!

நான் விரும்பிப் படிக்கும் மேட்ச் ரிப்போர்ட், பிரேம் பனிக்கருடையது (Prem Panicker). தி ஹிந்து கிரிக்கெட் கட்டுரைகளுக்கு அடுத்து நான் படிக்க ஆரம்பித்தது இவருடைய கட்டுரைகளைத்தான். ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ரீடிஃப் இணையத்தளத்தில் ஒருவரி விடாமல் படிக்க ஆரம்பித்து, இன்றுவரை இவர் எதை எழுதினாலும் படித்துவிடுகிறேன். (இப்போது ஹிந்து ரிப்போர்ட்டைப் பார்ப்பதுகூட கிடையாது.) நடுவில் காணாமல் போயிருந்தார். அல்லது என் கண்ணில் படாமல் இருந்தார். இப்போது யாகூவில் தொடர்ந்து எழுதுகிறார். ட்விட்டரிலும் வெளுத்துக் கட்டுகிறார். கேலி, கிண்டல், நெத்தியடி விமரிசனம் என்று இணையத்தில் பனிக்கர் அதகளம் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

பீட்டர் ரொபக் (Peter Roebuck) கிரிக்கெட் கட்டுரைகள் என்றால் உயிர். கிரிக்கெட் கட்டுரையை இவ்வளவு ஆழமாகவும் அலசமுடியும் என்று கற்றுக்கொடுப்பவர். வாரத்துக்கு ஒரு கட்டுரைதான் வெளிவரும். அந்த ஒரு வாரத்துக்கு அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கச் செய்துவிடுவார்.

இவர்கள் இருவர் தவிர கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, க்ரிகின்ஃபோ இணையத்தளத்தில் எழுதுகிற மிக உபயோகமான கட்டுரைகளையும் நான் தவறவிடுவதில்லை. கிரிக்கெட் உலகத்துக்குள் என்னென்ன நடக்கிறது, ஒரு கிரிக்கெட் மேட்சை எப்படி ரசிப்பது என்று ஒரு வாத்தியார் போல சொல்லிக் கொடுத்து நம்மை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்வார். இவர் கட்டுரைகள் போல இவர் ஆட்டமும் அழகாக இருந்திருந்தால் இந்தியாவுக்காக மேலும் பல மேட்சுகளில் பங்கேற்றிருப்பார்.

உலகக்கோப்பை பற்றி எத்தனையோ புள்ளி விவரங்கள் வெளிவந்தாலும் க்ரிக் இன்ஃபோவில் வெளியாகியுள்ள இந்தப் புள்ளி விவரங்கள் உண்மையிலேயே வித்தியாசமானவை.

Thursday, January 20, 2011

ராஜராஜ சோழனின் வெற்றி!




சென்னைப் புத்தகக் காட்சியில், நான் எழுதியுள்ள ராஜராஜ சோழன் புத்தகம் மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறது. புத்தகக் காட்சியில், கிழக்கில் விற்பனையான நூல்களில், ராஜராஜ சோழன் முதலிடம் பிடித்திருக்கிறது. அது மட்டுமில்லாமல், சென்னைப் புத்தகக் காட்சியில் அதிகம் விற்ற ஐந்து புத்தகங்களில் ஒன்று ராஜராஜ சோழன் என தினத்தந்தி, தினமணி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

என் வாழ்வின் மகத்தான தருணம் இது.




புத்தகத்தை இணையத்தில் வாங்க.

Friday, January 07, 2011

தேவை, புத்தகக் காட்சி அருகே ஒரு விமான நிலையம்!


இந்த விஷயத்தைப் போன வருடமே எழுதவேண்டும் என்று நினைத்து அப்படியே மறந்துவிட்டேன். எழுதத்தான் மறந்தேன் என்றால் அப்படி ஒரு விஷயம் நடந்ததையே மறந்ததால் சரியான தண்டனை எனக்கு. என்னை ஒரு பர்லாங்கு நடக்கவைத்துவிட்டது மாநகரப் போக்குவரத்துக் கழகம்.

இரண்டுநாள் முன்பு, தெரியாத்தனமாக சென்னைப் புத்தகக் காட்சி வழியாகச் செல்லும் பேருந்தில் ஏறி, 'ஒரு பச்சையப்பாஸ் கொடுங்க என்று கேட்டுவிட்டேன். அடுத்தநொடியே ‘எறங்கு சார். அங்கெல்லாம் நிக்காதுஎன்று முகம் சுளித்தார் நடத்துநர்.

புத்தகக்காட்சி வழியாக செல்லும் வண்டிதான் அது. எப்படி நிற்காமல் போகும்? விமான நிலையத்தின் வழியே போகும் அத்தனை பேருந்துகளும் அங்கு சல்யூட் அடித்து நின்று நிதானமாகச் செல்லும்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளும் (அட, சனிஞாயிறில்தான்) ஒரு புத்தகக் காட்சி நிறுத்தத்தில் அதன் வழியே செல்லும் பேருந்துக்கு நிற்காமல் வேறு என்ன வேலை? அரசு உத்தரவு போட மறந்துவிட்டதா? பபாசி விட்டுவைத்திருக்காதே? எங்கு தவறு நடக்கிறது?

சார், அங்க புக்ஃபேர் நடக்குதேஎன்று நடத்துநருடன் மல்லுக்கட்டத் தயாரானேன். அவருடைய குரல் உயர்ந்தது. ஃபுக்பேர் எல்லாம் நிக்காது சார். இறங்குங்க.

சே, போனவருடமும் இதேபோல அவதிப்பட்டேனே என்று அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது. ஆனால், திரும்பும்போதும் இந்தப் பிரச்னை விடவில்லை. இரவும் அந்த வழியாகச் செல்லும் மாநகரப் பேருந்துகளில் முக்கால்வாசி புத்தக் காட்சி நிறுத்தத்தில் நிற்கவில்லை.

உண்மையில், சென்னையில் ஓடும் பேருந்துகளில் பெரும்பாலானவை, சொகுசு பேருந்துகள்தான். இது பற்றி கோர்ட்டில் அரசு ஆயிரம்விதமாகச் சமாளித்தாலும் இதுதான் தினமும் நடக்கிற அநியாயம். அப்படிப்பட்ட பேருந்துகள்தான் புத்தகக்கண்காட்சி வழியே நிறைய செல்கின்றன. ஆனால் நிற்பதில்லை. ஒவ்வொருமுறையும் பேருந்தைப் பார்க்கிற மக்கள் அதை நோக்கி ஓடுவதும் பேருந்து விலகிச் செல்வதும் தினமும் நடக்கிற கதையாகிவிட்டது.

இன்று ஒரு நடத்துநரிடம் இதுகுறித்து விசாரித்தேன்.

ஏன் சார், பச்சையப்பாஸ்ல பஸ்ஸூ நிற்கறதில்லை. ஃபுக்பேர் நடக்குதே.

ஆமா சார். அதிகாரிங்க அங்க பஸ்ஸூ நிக்கணும்னுதான் சொல்றாங்க. ஆனா நாங்க நிறுத்தறதில்லை. அது அப்படித்தான்..

பச்சப்பாஸூம் முக்கியமான ஸ்டாப்பிங் ஆச்சே

ஏளனமாகச் சிரித்தார். அங்க பஸ்ஸை நிறுத்துனா ஸ்டூடன்ஸ் பஸ்ஸைக் கண்டம் பண்ணிடுவாங்க சார். அதனாலதான் சொகுச யாரும் அங்க நிறுத்தறதில்லை.

தவறு யார் பக்கம் என்று எனக்குக் குழம்பிவிட்டது. ஆனால் ஒன்று. புத்தக் காட்சி நிறுத்தமான பச்சையப்பா கல்லூரி அருகே (அல்லது எதிரில்) ஒரு விமான நிலையம் கட்டப்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு உண்டாகும்.

Wednesday, January 05, 2011

தஞ்சாவூர்ல ஒரு ராஜா!


ராஜராஜ சோழன் மற்றும் சோழர்களை மையமாகக் கொண்டு தமிழில் சில புனைவுகள் வெளிவந்துள்ளன. கல்கி, பொன்னியின் செல்வன் வழியாக சோழர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்திவிட்டவர். சுஜாதா, காந்தளூர் வசந்தகுமாரனையும் பாலகுமாரன், உடையாரையும் எழுதி தமிழர்களின் மனத்தில் சோழர்களின் வாழ்க்கையை மேலும் பதியவைத்துவிட்டார்கள். செல்வராகவனின் ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ஊறுகாய் அளவுக்குச் சோழர்களின் வரலாறு தொட்டுக்கொள்ளப்பட்டது. (ஆ.ஒ, ராஜராஜனுக்கு மிகவும் பொருத்தமான ஒரு தலைப்பு. கி.பி.1000ல் தமிழகத்தை ஆட்சி செய்தவர் அவர். 2000ல் யார் என்று நான் சொல்லவேண்டியதில்லை) ஆனால், ராஜராஜனின் வாழ்க்கையைக் கற்பனையாகப் பார்க்காமல் வரலாறாகப் பார்க்கும் நூல்கள் தமிழில் மிகக்குறைவாகவே உள்ளன.

சோழர்கள் வரலாற்றை முழுமூச்சில் ஆய்வு செய்தவர்களில் மிகமுக்கியமானவர், நீலகண்ட சாஸ்திரி. அவருடைய சோழர்கள் வரலாறு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல் குவியல்தான். ஒரு நாவல்போல அந்த நூலை கிடுகிடுவென வாசித்துவிடமுடியாது. ஒவ்வொரு பக்கத்துக்கும் அவர் இணைத்துள்ள ஃபுட்நோட்டே ஒரு நூலின் கனம் தாங்கும். மா. ராசமாணிக்கனாரின் ’தென்னாட்டு வரலாறு’ நூல் உள்ளதில் மிக எளிமையான மொழியைக் கொண்டது. குடவாயிலின் தஞ்சாவூர் நூல், முழுக்க முழுக்க தஞ்சாவூரின் வரலாறைச் சொல்லும் அதிஅற்புதம். இந்த நூல்களோடு, ராஜராஜனின் ஆயிரமாண்டு சிறப்பிதழுக்காக வரலாறு டாட் காம் உள்பட இணையத்தில் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளும் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவி புரிந்தன.

இதுவரை, சோழர்கள் வரலாற்றின் ஒரு பகுதியாகவே ராஜராஜ சோழனின் வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது. க.த. திருநாவுக்கரசு மட்டும் ராஜராஜ சோழன் பற்றி தனிநூல் எழுதியிருக்கிறார். ஆதாரங்கள் குறைவு என்பதால் அவரைப் பற்றிப் பிரத்தியேகமாக நூல் எழுதுகிற அளவுக்கு யாரும் முயலவில்லை.

ராஜராஜனிடம் வீரம் இருந்த அளவுக்கு மனிதமும் இருந்ததுதான் அவருடைய அழியாப் புகழுக்குக் காரணம். தன்னை நம்பி இருந்த மக்களுக்குத் தரமான வாழ்க்கையை அளித்திட அவர் உண்மையிலேயே மெனக்கெட்டிருக்கிறார். இன்று, தமிழகத்தில் உள்ள பல ஏரிகள் சோழர்கள் காலத்தில் கட்டமைக்கப்பட்டவை. தமிழக எல்லைத் தாண்டி போரிட்டாலும் அதனால் கிடைக்கப்பெற்றச் செல்வங்களை மீண்டும் தன் மக்களுக்கே வழங்கினார் ராஜராஜன். மக்கள் வங்கி ஒன்றை ஆரம்பித்து புதிய ஆட்சிமுறையை உருவாக்கினார்.மக்கள் அரசனாக அவர் காலத்தில் போற்றப்பட்டிருக்கிறார்.

காலமெல்லாம் சோழர்களின் புகழ்பாடும் தஞ்சைப் பெரிய கோயில் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான். பிற்காலச் சோழர் வரலாற்றில் ராஜராஜனின் தனிச்சிறப்பான பங்களிப்பை. அதன் சமூக, அரசியல் பின்னணியைக் கொண்டு விவரித்துள்ளேன்.

ராஜராஜ சோழன் நூல் பற்றி பாரா, பத்ரி.

இணையத்தில் வாங்க.